மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் 
தேசிய செய்திகள்

மத்திய அரசு திருத்தம் செய்ய தயாராக இருப்பதால் வேளாண் சட்டங்களில் குறை உள்ளதாக அர்த்தம் அல்ல; மாநிலங்களவையில் வேளாண் மந்திரி விளக்கம்

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதால், அவற்றில் குறை இருப்பதாக அர்த்தம் அல்ல என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

தினத்தந்தி

வரி கிடையாது

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று 3-வது நாளாக விவாதம் நடைபெற்றது.

விவாதத்துக்கிடையே, மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் குறுக்கிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. விவசாய மண்டிகள் முறை தொடரும். குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் விளைபொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும். இந்த சட்டங்கள், மண்டிக்கு வெளியிலும் விளைபொருட்களை விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கிறது. அப்படி விற்க வரியும் கிடையாது. மண்டியில் விற்பதற்கு மாநில அரசுகள் வரி விதிக்கின்றன.

அதை எதிர்த்து போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு, வரிவிதிப்பில் இருந்து விடுவிக்கும் முறைக்கு எதிராக போராடுவது வினோதமாக இருக்கிறது.

பஞ்சாப் சட்டத்தில் ஜெயில்

மேலும், ஒப்பந்த முறை விவசாயம் பற்றிய மத்திய அரசின் சட்டத்தில், ஒப்பந்தத்தில் இருந்து விவசாயிகள் வெளியேறிக்கொள்ள உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒப்பந்த விவசாய முறையில், விவசாயிகள் வெளியேறினால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்க வழி உண்டு. அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, யாருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று பஞ்சாப் விவசாயிகளை பார்த்து கேட்கிறேன்.

இதை கருப்பு சட்டங்கள் என்று எதிர்க்கட்சிகள் வர்ணிக்கின்றன. அப்படி கருப்பாக என்ன இருக்கிறது என்று சொன்னால், அதை சரி செய்யலாம் என்று நானும் 2 மாதங்களாக கேட்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகளோ, விவசாய சங்கங்களோ எதுவும் சொல்ல முன்வரவில்லை.

குறை இல்லை

விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத்தான் வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியது. அதற்காக அந்த சட்டங்களில் குறை இருப்பதாக அர்த்தம் அல்ல.

விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் ஒரு குறை கூட சொல்ல முடியவில்லை. மேலும், நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்த்து போராடுவதாக கூறுவது தவறு. ஒரே ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான், தவறான பிரசாரத்தால் தூண்டப்பட்டு போராடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியபோது, இது ஒரு மாநில பிரச்சினை அல்ல என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

நிலம் பறிபோகாது

அதையடுத்து தோமர் தொடர்ந்து பேசியதாவது:-

இது ஒரு மாநிலத்தில் மட்டும் நடக்கும் பிரச்சினைதான். ஒப்பந்த முறை விவசாயத்தின்போது, விவசாயிகள் தங்கள் நிலத்தை வியாபாரிகளிடம் இழந்து விடுவார்கள் என்றும் பொய் பிரசாரம் செய்கிறார்கள். அதுபோன்ற ஷரத்து எங்கே இருக்கிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக வேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு. அதற்கு இந்த வேளாண் சட்டங்கள் வழிவகுக்கும். விவசாயிகள் வாழ்க்கையில் இவை புரட்சிகரமான மாறுதலை உண்டாக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்