டெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கேவுடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை (33 சதவீதம்) வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகால மாக உள்ளது. ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை.
இந்த நிலையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்திவிட்டு பெண்களுக்கு அதன் பிறகு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற முடிவுக்கு மத்திய பாஜக அரசு வந்துள்ளது.
அதன் அடிப்படையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் உள்ள மக்களவையில் மட்டும் 850 பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொகுதிகளின் எண்ணிக்கையும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும்.
ஆனால் பாஜகவிடம் அந்த அளவுக்கு எம்.பி.க்கள் இல்லை. ஆனாலும், தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற பாஜக தீவிரமாகஉள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 16 முதல் 18-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது தொகுதி மறுவரையறையுடன் கூடிய பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா கொண்டுவரப்பட்டது.
ஆனால், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைத்து கொண்டு வந்ததால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தன. இதனால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் நடந்தது. அந்த தொடரின் போது இந்த சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பியது. ஆனால் அதற்கான காலச்சூழல் அமையவில்லை. எனவே அந்த மசோதாவை தற்காலிகமாக ஒத்திவைத்தது. மேலும், நாடாளுமன்ற கூட்டம் கடந்த ஆகஸ்ட் 13- ம் தேதியுடன் நிறைவடைந்தது.
பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தக்கூட்டம் இன்னும் சட்டப்படிமுடித்து வைக்கப்படவில்லை. ஆகவே மீண்டும் சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு பாஜக அரசு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியானது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பலம் மேலும் குறைந்துள்ளது.
இந்தியா கூட்டணியில் இருந்து இருந்து திமுக விலகிவிட்டது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிளவுபட்டு விட்டது. திரிணாமுல் காங்கிரசின் பெரும் பகுதி எம். பி.க்கள் பாஜகவை ஆதரித்துள்ளனர்.
அதைப்போல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் 11-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றவும் பாஜக முடிவு செய்துள்ளது.
எனவே எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்கும் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையறை செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. ஆகவே எல்லா மாநிலங்களிலும் 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியது. அதை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.