தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் கைதிகள் விசாரணையை துரிதப்படுத்தாமல் நீதித்துறையை குறைசொல்வதா?

கைதிகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தாமல், நீதித்துறையை குறைசொல்வதா? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

புதுடெல்லி,

2 நீதிபதிகள் நாட்டில் உள்ள சிறைகளில் இடப்பற்றாக்குறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பரிதாபாத் சிறையை ஆய்வு செய்த அவர்கள் ஜூன் மாதம் தங்கள் பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, கைதிகள் மீதான விசாரணை நிலுவை அதிகம் இருப்பதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிலை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமான் லேகி தாக்கல் செய்தார். அந்த பதிலில், விசாரணை கோர்ட்டுகள் மெதுவாக நடைபெறுகின்றன என்பதும் ஒரு காரணம் என கூறப்பட்டு இருந்தது.

இதனை படித்துப்பார்த்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். உள்துறை அமைச்சகம் குற்றவியல் நீதி நடவடிக்கையை விமர்சிக்கிறது. ஆனால் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்புவதில்லை. குற்றவியல் நீதி நடவடிக்கையையும், நீதித்துறையையும் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளும்படி உங்கள் ஆட்களிடம் சொல்லுங்கள்.

மீண்டும் நீதித்துறை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தை தவிர அனைவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் (சுப்ரீம் கோர்ட்டு) எப்போதும் சரியாக இருக்கிறோம், ஆனாலும் இன்னும் எதுவும் நடக்கவில்லை. அரசு எப்படி வேலை பார்க்க வேண்டும் என்று கோர்ட்டுகள் ஏன் சொல்லக்கூடாது? தலையாக இருந்தாலும், வாலாக இருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதுபோல இந்திய அரசின் பதில் உள்ளது என்பதே நீதித்துறையின் கவலையாக இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் லேகி, அரசு தனித்து செயல்படவில்லை. நான் ஒருபோதும் நீதித்துறையை குற்றம்சுமத்தவில்லை என்றார். அதற்கு நீதிபதிகள், நீங்கள் அதுபோல் சொல்லவில்லை, ஆனால் உங்கள் வாடிக்கையாளர் (மத்திய அரசு) அதுபோல் சொல்கிறது என்றனர்.

அதற்கு லேகி, நாட்டில் 19 மாநிலங்களில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களில் 164 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 97 அறிவியல் பதவிகள், 67 தொழில்நுட்ப பதவிகள். கர்நாடகம், மராட்டியம் உள்பட பல மாநிலங்கள் இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர்களை விரைவாக தரும்படி கூறியிருக்கிறோம். எனவே அனைத்து மாநிலங்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது என்றார்.

எப்போது நிரப்புவீர்கள்?

அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுக்கு இந்த தகவலை விரைவாக அளிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வளவு காலத்தில் இந்த காலி பணியிடங்களை நிரப்பும் என்பதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதேபோல எத்தனை சிறுவர் நீதித்துறை வாரியத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளிடம் தகவல் கேட்டு பெறவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.