தேசிய செய்திகள்

மருத்துவச்சேர்க்கையில் 10% இடஒதுக்கீடு; விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டிற்கு மத்திய அரசு வேண்டுகோள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மருத்துவச்சேர்க்கையில் 10% இடஒதுக்கீடு வழங்கிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2020-ம் ஆண்டு நடக்க இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் வந்த நிலையில் இன்னும் கவுன்சிலிங் நடத்தப்படாமல், இடங்கள் ஒதுக்கப்படாமல் உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மருத்துவச்சேர்க்கையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் பெறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவச்சேர்க்கையில் இடம்பெறலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மருத்துவச்சேர்க்கையில் இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என எவ்வாறு நிர்ணயித்தீர்கள்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மேலும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டதில் சந்தேகம் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் குழு அமைத்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இதனையடுத்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் மருத்துவப்படிப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நிர்ணயித்தது. அந்த குழு பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது சரியே என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த குழு தயாரித்துள்ள அறிக்கை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டிற்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வழக்கு வரும் 6-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே முதுகலை நீட் மருத்துவப்படிப்புக்கான அட்மிஷன் மற்றும் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, மருத்துவ படிப்புக்கான நீட் அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் உடனடியாக கவுன்சிலிங்கை நடத்தக் கோரியும் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்