புதுடெல்லி,
தேசம் முழுவதும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக மாநிலங்களிடம் தகவல்களை சேகரிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார். ரோஹிங்யா, சட்டவிரோத குடியேறிகளின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க உள்ளூர் போலீஸ்களுக்கு உத்தரவிட மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டவர்கள். 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் ஜூலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியாவில் இருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்களில் சிலருக்கு சட்டவிரோதமான நடவடிக்கையில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவிற்கு ரோஹிங்யாக்கள் நுழைந்துவிடாத வண்ணம் பாதுகாப்பு எல்லையில் அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றார். ரோஹிங்யாக்களின் தகவல்களை பெறுவது என்பது அவர்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆவணங்களை வழங்குவதற்கு என்று பொருள் கிடையாது என்று உள்துறை அதிகாரி சொல்கிறார்.
இந்தியாவிற்குள் சட்டப்பூர்வமாக குடிபெயர்ந்த இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே ஆதார் போன்ற ஆவணங்கள் வழங்க முடியும், இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு மேலாக இருப்பவர்களுக்குதான் வழங்க முடியும். ரோஹிங்யாக்களை பொறுத்தவரையில் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், அவர்கள் இதற்கு தகுதியானவர்கள் கிடையாது எனவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். புதன் கிழமை சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அரசு ஆதார் கார்டு வழங்க முடியாது என்றார்.
கேரளாவில் மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் பேசுகையில், இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அவர்களை வெளியேற்ற அவர்களுடைய நகர்வை கண்காணிக்கவும், தனிப்பட்ட தகவல்களை பெறவும் மாநில அரசுக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.