இழப்பீடு
ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அவற்றுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், போதுமான தொகை வசூல் ஆகாததால், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலுவைத்தொகையை மத்திய அரசு கடன் வாங்கி மாநிலங்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப கடந்த நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது.
ரூ.40 ஆயிரம் கோடி
அதுபோல், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று, மாநிலங்களுக்கு வழங்குவது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி விடுவித்தது. இத்துடன், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை உரிய காலத்தில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
சுகாதார கட்டமைப்பு
இந்த தொகை, சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், மூலதன செலவுகளை மேற்கொள்வதற்கும் மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள உதவும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தொகை, செஸ் வருவாயில் இருந்து 2 மாதங்களுக்கு ஒருதடவை மாநிலங்களுக்கு வழங்கப்படும் வழக்கமான இழப்பீட்டுடன் கூடுதலாக அளிக்கப்படும் தொகை ஆகும்.