புதுடெல்லி,
இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலின் புதிய உருமாறிய கொரோனா வகைகள் தோன்றிய நிலையில், கடந்த டிசம்பர் 25-ந் தேதி இந்திய கொரோனா 2 மரபியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில், 10 தேசிய ஆய்வகங்கள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ்களின் மரபணு தொகுதியை வகைப்படுத்துவது, அவற்றின் சுழற்சியை ஆராய்வது, பல்வேறு உருமாறிய கொரோனா வைரஸ்களின் தொற்றுநோய் தன்மையை தொடர்புபடுத்தி ஆராய்ச்சி செய்வது ஆகிய பணிகளை மரபணு வகைப்பாட்டுக்கான மத்திய குழு மேற்கொண்டு வருகிறது.
கொரானோ 2-வது அலை நாடு முழுவதும் தீவிரமாக தாக்கிவரும் நிலையில், இந்த குழு விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில், கொரோனா விஷயத்தில் அரசின் கொள்கை என்பது ஆதாரம் சார்ந்ததாக இருக்கவேண்டுமே தவிர, வேறு எதை வைத்தும் இருக்கக்கூடாது. விஞ்ஞானிகளாக நாங்கள் ஆதாரங்களை அளிக்கிறோம். கொள்கை வகுப்பது அரசின் கடமை என்று மத்திய குழுவின் தலைவர் ஷாகித் ஜமீல் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஷாகித் ஜமீல் விலகியுள்ளார். தனது விலகலுக்காக எந்த காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த வாரம் அமெரிக்க பத்தரிகை ஒன்றில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில், மத்திய அரசை விமர்சித்து கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில் இந்தியாவில் ஆதாரம் சார்ந்த கொள்கை வகுப்பு விஷயத்தில் விஞ்ஞானிகள் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறார்கள். கொரோனா வைரஸ் குறித்து மேலும் ஆராயவும், கணிக்கவும், கட்டுப்படுத்தவும் அரசிடம் உள்ள இதுதொடர்பான தரவுகளை வழங்கவேண்டும் என்று இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டை மீறிப்போய்க்கொண்டிருக்கும் நிலையில், தரவு சார்ந்த கொள்கை வகுப்பு என்பது இல்லாமல் போகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஷாகித் ஜமீல் விலகல் தொடர்பாக மத்திய அரசைத் தாக்கியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆதாரம் சார்ந்த கொள்கை உருவாக்கத்தில் மோடி அரசின் வெறுப்புதான் நாட்டை தற்போதைய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்று கூறியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் மிகச் சிறந்த கிருமியியல் நிபுணர்களில் ஒருவரான ஷாகித் ஜமீலின் ராஜினாமா, உண்மையிலேயே சோகமானது. அச்சமோ, சார்போ இன்றி தமது கருத்தைக் கூறும் தொழில்முறை நிபுணர்களுக்கு மோடி அரசில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ டுவிட்டரில், அவர்களின் அறியாமையால் இன்னும் எவ்வளவு காலம்தான் நாடு கஷ்டப்படப்போகிறது என்று கூறியுள்ளது.
ஜமீல் தானாக பதவி விலகினாரா அல்லது விலக வைக்கப்பட்டாரா என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பசுவின் கோமியம் கொரோனா தொற்றைத் தடுக்கும் என்று பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், அறிவியல் உண்மைகள் அன்றி போலியான பார்முலாக்களை நம்பும் பா.ஜ.க.வினர் இருக்கும்போது, ஜமீல் பதவி விலகியதில் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசியும் பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டியுள்ளார்.