தேசிய செய்திகள்

இந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண் கலத்தை இஸ்ரோ தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக் கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.

தொடர்ந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற் காக மற்றொரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.978 கோடியாகும்.

பின்னர் அங்கிருந்து அந்த விண்கலம் சென்னை அருகே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தது. இது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ரகத்தில் 14-வது ராக் கெட் ஆகும். இதில் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.53 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் 58 நிமிடங்களுக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, விண்கலத்தை நேற்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி 20 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 2.43 மணிக்கு விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 43.3 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த ராக்கெட்டில் 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டர், 1,471 கிலோ எடைகொண்ட லேண்டர், 27 கிலோ எடை கொண்ட ரோவர் உள்பட 3,877 கிலோ எடை கொண்ட ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

புறப்பட்ட சுமார் 16 நிமிடம் 24 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அடைந்ததும், சந்திரயான்-2 விண் கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி சந்திரயான்-2 விண்கலத்தை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. அதையடுத்து, பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம், விண்கலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டார். அனைவரும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினர். விஞ்ஞானிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர் களை ஆரத்தழுவி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பார்வையாளர் அரங்கில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பார்த்து பரவசப்பட்டனர். வானம் நேற்று மேகமூட்டமாக இருந்ததால் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை சில நொடிகள் மட்டுமே காணமுடிந்தது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

நிலவை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் சந்திரயான்-2 விண்கலம் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் வரும் செப்டம்பர் முதலாவது வாரம் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்யப்படுகிறது.

பின்னர் இதில் பொருத்தப்பட்டுள்ள விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் கருவிகள் ஆய்வு பணிகளை தொடங்கும். நிலவுக்கு செல்லவும் மற்றும் நிலவின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை அனுப்புவதுமான சவாலான பணி இதுவாகும்.

சந்திரயான்-2 கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது பொருத்தமில்லாத வானிலை ஏற்பட்டதால் ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உயரத்தை இந்தியா எட்டும் திட்டமாக இந்த திட்டம் மாறும்.

லேண்டர் மற்றும் ரோவரின் ஆய்வுப்பணி சில நாட்களில் முடிந்து விடும். அதே நேரத்தில் ஆர்பிட்டர் ஓராண்டு வரை பணியை தொடரும். ரோவர், சூரியசக்தி தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, 500 மீட்டர் தூரம் வரை பயணம் செய்து ஆய்வு செய்யும். ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் நேரடியாக பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும்.

நிலவின் தென்துருவத்தில், கனிமங்கள், ரசாயன கலவை, பவுதிக துகள்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். இதன்மூலம், நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை அறிய முடியும்.

ரோவர் தகவல், படங்கள் மற்றும் தரவை லேண்டருடன் பகிர்ந்து கொள்ளும். அது, இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ளும். 500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் 120 தொழில் நிறுவனங்கள் இந்த பணிக்கு உதவி செய்தன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:-

இன்று வரலாற்றில் முக்கியமான நாள். நிலவுக்கான இந்தியாவின் சரித்திர பயணம் தொடங்கும் நாள். சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டமிட்ட உயரத்தை விட இன்று 6 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் கூடுதலாக கொண்டு சென்றுள்ளது. நாளை இஸ்ரோ குழுவினர் செய்ய வேண்டிய வேலையை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்றே செய்துள்ளது.

கடந்த 15-ந் தேதி ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 36 மணி நேரத்தில் கண்டறியப்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டு ராக்கெட் ஏவும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு கடந்த ஒரு வாரம் தூங்காமல் அனைவரும் வேலை செய்துள்ளோம். முன்பு அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளின் செயல்பாட்டை விட தற்போது ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 15 சதவீதம் கூடுதல் செயல்பாடுடன் உள்ளது.

மேலும், ஒரே திட்டத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று கருவிகளும் நிலவிற்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. கடந்த ஒன்றரை வருடமாக செயற்கைகோள் குழு மிகக்கடினமாக உழைத்து சந்திரயான்-2 வை வடிவமைத்துள்ளது. அடுத்த ஒன்றரை மாதத்தில் 15 மிகக்கடினமான கட்டங்களை தாண்டி சந்திரயான்-2 நிலவிற்கு கொண்டுசெல்லப்படும்.

லேண்டர், ரோவர் நிலவில் தரை இறங்கும் கடைசி 15 நிமிடம் திகிலான நேரமாக இருக்கும். இந்திய தேசிய கொடி விண்வெளி துறையில் உயரத்தில் பறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இமாலய சாதனை

நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரை இறக்கி, ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே சாதனை படைத்துள்ளன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இடம்பெற உள்ளது.

ஆனால், நிலவின் தென்துருவத்தில் எந்த நாடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டது இல்லை. அந்த வகையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்ய உள்ள முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற உள்ளது. இத்தகைய இமாலய சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு