சென்னை,
இந்தியாவில் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாகிவிட்டது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் அரசு நலத்திட்டங்கள் பெறுவது வரை ஆதார் அட்டை அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் நேர விரயம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஆதாரை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக "e-Aadhaar App" எனப்படும் இந்த புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த e-Aadhaar செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் கிடைக்கும். இந்த செயலியில் அடுத்தடுத்து புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல்போன் எண் மற்றும் முகவரி விவரங்களை, செயலி வாயிலாக, தனிநபர் சுயமாக திருத்தம் செய்துகொள்ள முடியும் வகையில் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதாரில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எண்ணுக்கு ஓ.டி.பி., பெற்று, புதிய எண் பதிவு செய்து, முக அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி, மொபைல் எண் மாற்றம் கோரலாம் . அதேபோல், உரிய ஆவணங்களை இணைத்து, முகவரி மாற்றத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கட்டணமாக, 75 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும் . அதேபோல, ஆதார் விவரங்கள் கேட்கப்படும் இடத்தில் இனி நகலாக கொடுக்க விருப்பம் இல்லையென்றால் ஆப் வழியாகவே ஆப்லைனில் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஆதார் விவரங்களின் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.