லூதியானா,
பஞ்சாபை பஞ்சாபியர்கள்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்று பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி கூறினார், ஆனால் அவருடைய அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னதாக, பிரியங்கா காந்தியுடன் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது பேசிய முதல் மந்திரி சன்னி பேசுகையில், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வருபவர்களை பஞ்சாபின் உள்ளே நுழைய விடாதீர்கள் என்று பேசியது சர்ச்சையானது.
அவருடைய இந்த கருத்தை பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தில் இருந்து யாரும் பஞ்சாப் வந்து ஆட்சியமைக்க ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, பிரதமரால் தனது இல்லத்திலிருந்து 5-6 கி.மீ தூரம் கூட நடந்து சென்று, போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்க இயலவில்லை . ஆனால் நேற்று பதன்கோட்டில் பிரசாரத்துக்காக வந்தார். அவர் 1 வருட காலம் விவசாயிகளை போராட வைத்தார்.
அவர் அமெரிக்கா, கனடா, உலகமெங்கும் சுற்றி வந்து ரூ.16000 கோடி மதிப்பிலான 2 ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளார்.ஆனால், நிலுவையில் உள்ள ரூ.14000 கோடி தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அவருடைய அமைச்சரவையில் உள்ள மந்திரியின் மகன் 6 விவசாயிகளின் மீது கார் ஏற்றினார் என்று பேசினார்./