மும்பை,
மும்பை தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மோசடி புகார்
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது மும்பையை சோந்த தொழில் அதிபர் நிதின் பாரய் பாந்திரா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவன இயக்குனர் காசிப்கான், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 51 லட்சத்தை முதலீடு செய்யுமாறு என்னிடம் கூறினர். இதற்காக எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவனத்தின் சார்பில் புனேயில் உள்ள ஹடாப்சர் மற்றும் கோரேகான் பகுதிகளில் ஜிம், ஸ்பா திறந்து தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நான் பணத்தை முதலீடு செய்தேன். ஆனால் சொன்னது போல அவர்கள் செய்யவில்லை. மேலும் என்னிடம் பெற்ற பணத்தை திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, என்னை மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை அடுத்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வேதனை அளிக்கிறது
இந்தநிலையில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், ராஜ்குந்த்ரா மற்றும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். எஸ்.எப்.எல். பிட்னஸ் காசிப் கானால் நடத்தப்பட்டது. நிறுவனத்தின் எல்லா நடவடிக்கையும் அவரால் தான் செய்யப்பட்டது. அவரது பணபரிமாற்றங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவரிடம் இருந்து நாங்கள் 1 ரூபாய் கூட வாங்கவில்லை. முதலீட்டாளர்கள் அனைவரும் காசிப் கானிடம் தான் நேரடியாக தொடர்பு வைத்து இருந்தனர்.
அந்த நிறுவனம் 2014-ல் மூடப்பட்டது. 28 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் நான் சேர்த்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.