முதல்-மந்திரியின் தந்தை மீது புகார்
சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல்(காங்கிரஸ்) . இவரது தந்தை நந்தகுமார் (வயது 86). உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நந்தகுமார், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து சர்வ பிராமிண் சமாஜ் என்ற அமைப்பு சார்பில் சத்தீஷ்கார் மாநில போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
அந்த புகாரில், நந்தகுமார் பிராமணர்கள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவர்கள் வெளிநாட்டினர். கிராமத்துக்குள் அவர்களை நுழைய விடக்கூடாது என்று பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனையடுத்து நந்தகுமார் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதிரடி கைது
தனது தந்தை மீதான புகார் குறித்து முதல்-மந்திரி பூபேஷ் பாகல் வெளியிட்ட அறிக்கையில், சத்தீஷ்காரில் சட்டத்தின்முன் அனைவரும் சமம். தவறு செய்தவர்கள் எனது தந்தையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்தான். அனைத்து மத, இன, சமூகத்தினரும் எங்களுக்கு ஒன்றுதான். எனது தந்தையின் அவதூறான பேச்சு என்னை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் டெல்லியில் இருந்த நந்தகுமார் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை ராய்ப்பூர் அழைத்து வந்த சத்தீஷ்கார் மாநில போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.