புதுடெல்லி,
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும், பிரச்சினை இன்றியும் தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சுற்றிச்சுழன்று செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா, தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அதனால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 13-ந் தேதி, சுனில் அரோராவிடம் இருந்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட சுஷில் சந்திரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்தே பதவியேற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
சுஷில் சந்திராவுடன், தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து பணிபுரிவதாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் இன்னும் நிறைவடையாத நிலையில், அந்த மாநிலம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் வருகிற மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் பதவியேற்ற நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது, தேர்தல் ஆணைய பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.