தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்-மந்திரி ரங்கசாமி

இன்று ஒரு நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே முழுமையான பட் ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்காக புதுவை சட்டசபை இன்று காலை கூடியது.

இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையை சபாநாயகர் செல்வம் சபை நிகழ்வுகளைதொடங்கி வைத்தார். தொடர்ந்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-மந்திரி ரங்கசாமி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மேலும் நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது. இதையடுத்து சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று ஒரு நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. தேர்தலுக்கு பிறகு தான் புதுவை சட்டசபை மீண்டும் கூடும். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் முழுமையான பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும்.

இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளி யாகும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அன்றைய தினமே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அரசு வாகனங்களை சட்டசபை செயலாளரிடம் ஒப்படைத்து விடுவார்கள். தேர்தல் வரை காபந்து முதல்-மந்திரியாக ரங்க சாமி தொடர்வார்.