குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவு
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான ஒரு கேள்விக்கு நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு குறைவுதான் என்று பகுப்பாய்வு அறிக்கை கூறுகிறது.குழந்தைகளுக்கு ஏற்படுகிற பாதிப்பு சிறிய அளவில் தான் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் அறிகுறியற்றவர்களாகவே இருக்கிறார்கள். எனவே அத்தகைய குழந்தைகளுக்காக பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக எந்தவொரு செயல்திட்டமும் வகுக்கப்படவில்லை.
மிக அபூர்வமாகத்தான் கடுமையான பாதிப்பை பார்க்க முடிகிறது. இந்த பாதிப்பு, கொரோனா தாக்கி 3 முதல் 6 வாரங்களுக்கு பிறகுதான் நேருகிறது. குழந்தைகளிடம் கொரோனா வைரசால் ஏற்படுகிற நீண்ட கால பாதிப்பு குறித்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் குழந்தைகள் நலத்துறை ஆவணப்படுத்துகிறது.
கொரோனா சிகிச்சையை பொறுத்தமட்டில் 3 அடுக்கு சிகிச்சை வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.லேசான, அறிகுறிகளுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கொரோனா பராமரிப்பு மையமும், மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் அர்ப்பணிக்கப்பட்ட சுகாதார மையங்களும், தீவிரமான பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா ஆஸ்பத்திரிகளும் உள்ளன.இவற்றில் சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிகாட்டும் நெறிமறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா பற்றிய தொலை தொடர்பு ஆலோசனையை மாணவர்களுக்கு, பெற்றோருக்கு, ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக 84484 40632 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை வசதி உள்ளது.
பள்ளிகளை திறப்பது தொடர்பான நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.