போபால்,
மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த வருடம் சட்டமன்றத்திற்கான தேர்தல் அங்கு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். இதில் 3 பேர் புதியவர்கள். இதற்கான நிகழ்ச்சி ராஜ்பவனில் இன்று காலை நடந்தது. இதில், பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களான பாலகிருஷ்ண படிடார், நாராயண் சிங் குஷ்வஹா மற்றும் ஜலம் சிங் பட்டேல் ஆகியோருக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சவுகானுடன், அமைச்சரவையின் மூத்த மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வருகிற பிப்ரவரி 24ந்தேதி மங்காவ்லி மற்றும் கொலாரஸ் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் நன்னடத்தை விதிமீறிய செயல் என காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.