கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் தாஸ்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து மிரட்டி தங்கம் பறித்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான பாரதி கோஷ், அவரது கணவர் உள்பட 9 பேர் மீது கடந்த ஜூனில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் கோஷ். இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியான கோஷின் நெருங்கிய கூட்டாளி சுஜித் மண்டல், புதுடெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து சி.பி.ஐ.யால் இன்று கைது செய்யப்பட்டார்.
இவர்கள் அனைவரின் மீதும் மிரட்டி பணம் பறித்தல், காயம் ஏற்படுத்துவோம் என நபர் ஒருவரை அச்சமூட்டுதல், மோசடி மற்றும் குற்ற சதிகளில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.
மேற்கு மிட்னாபூரின் எஸ்.பி.யாக இருந்த கோஷ், கடந்த 2017ம் ஆண்டு முக்கியத்துவமற்ற பதவி ஒன்றுக்கு பணி இடமாறுதல் வழங்கிய நிலையில் தனது பதவியில் இருந்து விலகினார்.