புதுடெல்லி,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ், இந்திய வனப்பணி, என்ஜினீயரிங் சேவைகள் பணி உள்பட பல்வேறு பணிகளுக்கான காலி இடங்களுக்கு எழுத்து தேர்வுகளை நடத்துகிறது. இதன்படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்
அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வுகள் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் அக்டோபர் 10 ஆம் தேதி யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வுகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து யு.பி.எஸ்.சி. முதன்மைத்தேர்வுகள் 2022 ஜனவரி மாதம் 7, 8, 9, 15 மற்றும் 16-ந் தேதிகளிலும், இந்திய வனப்பணிகளுக்கான முதன்மைத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி தொடங்கி, மார்ச் 8-ந் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் குறித்த தேதிகளில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 7, 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்று வருவதற்கான முறையான முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது.