புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி இந்த நோட்டீசை வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது. காங்கிரஸ் எம்.பி.க்களான பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும் பதவிநீக்க நோட்டீசில் கையெழுத்து போட்ட எம்.பி.க்களில் ஒருவருமான கபில்சிபல் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் செல்லமேஸ்வர், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கை தாக்கல் செய்த கபில்சிபல், இதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அவசர விசாரணைக்காக தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த விவகாரத்தை எடுத்துச்செல்லுமாறு கபில்சிபலிடம் நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கில் கபில்சிபலுடன், வக்கீல் பிரசாந்த் பூஷணும் ஆஜராகி இருந்தார். இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ஏ.கே.சிக்ரி, தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே என்.வி.ரமணா, அருண்மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.