கன்னூர்,
கேரளாவில் உள்ள கண்ணூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிபிஐ-எம் தொண்டர்கள் இருவர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து இச்சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான், இந்த தாக்குதலுக்கு காரணம் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதேபோல், மற்றொரு சம்பவமாக இன்று சிபிஐ(எம்) கட்சியினருக்கும் பாரதீய ஜனதா கட்சியினருக்கும் இடையே கோதபரம்பு பகுதியில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், அடுத்தடுத்த மோதலால் கண்ணூர் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.