தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எடியூரப்பா வரவேற்றார்.

பெங்களுரூ,

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது.

14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பிறகு கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.

காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதில் 3 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் இதை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது.

அதேவேளையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிச.5ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன் எனவும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்