தேசிய செய்திகள்

நண்பரை தாக்கி கல்லூரி மாணவி கற்பழிப்பு; மீன் லாரி டிரைவர் கைது

மங்களூருவில் கடற்கரைக்கு சென்றபோது நண்பரை தாக்கி கல்லூரி மாணவியை கற்பழித்த மீன் லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;

கல்லூரி மாணவி கற்பழிப்பு

மங்களூரு நகர் சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட சீனிவாச நகர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த கல்லூரி மாணவி கடந்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி, தனது ஆண் நண்பர் ஒருவருடன் அங்குள்ள லைட்ஹவுஸ் கடற்கரைக்கு சன்றுள்ளார்.

அங்கு அவர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த மீன் லாரி டிரைவரான முனாஜ் அகமது (வயது 30) என்பவர், கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி விரட்டியடித்துவிட்டு அவரை மறைவான பகுதிக்கு தூக்கி சென்று வலுகட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது.

மீன் லாரி டிரைவர் கைது

மேலும் கல்லூரி மாணவியை கற்பழிப்பதை முனாஜ் அகமது தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோவை காண்பித்து அவர் மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி, நடந்த சம்பவம் குறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஜ் அகமதுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பரை அடித்து விரட்டி கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.