நாசிக்,
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது, மும்பையில் 1,140க்கும் மேற்பட்ட மசூதிகளில் விதிகளை மீறி அதிகாலை 5 மணியளவில் ஒலிபெருக்கியை உபயோகிப்பது மாநிலத்தின் அமைதியை கெடுக்கிறது.
அனைத்து ஒலிபெருக்கிகளும் மசூதியில் இருந்து நீக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என கூறினார். மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கியில் அனுமன் பஜனையை படிக்கும்படியும் தனது கட்சி தொண்டர்களிடம் அவர் கூறியுள்ளார்.
இதனால், சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மராட்டிய போலீசார் கைது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அதன்படி, நாசிக் மாவட்டத்தில் மொத்தம் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி நாசிக் ஐ.ஜி. சேகர் பாட்டீல் கூறும்போது, சட்ட விதிகளின்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகாரிகளின் அனுமதி இன்றி ஒலிபெருக்கி எதுவும் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரலில், முதல்-மந்திரி வீட்டின் முன் அனுமன் பஜனை பாட முயன்ற விவகாரத்தில் சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ.வான அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.