பெங்களூரு,
பெங்களூரு வருவாய் மண்டலத்தில் உள்ள தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று கலந்துரையாடினார். இதில் அவர் பேசியதாவது:-
தொழில்துறை சார்பில் தொழில்முனைவோர் ஆகுங்கள்-வேலை கொடுங்கள் என்ற பெயரில் கருத்தரங்கு வருகிற 11, 12-ந் தேதிகளில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் இந்த கருத்தரங்கில், தொழில்முனைவோர் ஆகுங்கள்-வேலை கொடுங்கள் என்ற விஷயம் குறித்து விவசாதம் நடக்கிறது. இதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். 2-வது நாள் தொழில் நிறுவனங்களின் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது.
இதில் தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறிந்து அதே இடத்தில் அவற்றுக்கு தீர்வு காணப்படும். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதனால் தொழில் நிறுவனத்தினர் கவலைப்பட தேவை இல்லை. எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது என்பதை அறிந்து, அதுபற்றி மின்சாரத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்படும்.
நிலம், நீர், மின்சாரம் மற்றும் தேர்ந்த பணியாளர்கள் வழங்குவது அரசின் கடமை. கர்நாடகத்திற்கு அதிக தொழில் முதலீடுகள் வர வேண்டும். வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும் என்பது அரசின் விருப்பம். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. கர்நாடக தொழிற்கொள்கையில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க அனுமதி வழங்கும் பணிகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.