தேசிய செய்திகள்

நாளை மாநில தேர்தல் ஆணையர்களுக்கான மாநாடு

மாநாட்டில் அனைத்து மாநில, யூனியன் பிரதேச தேர்தல் ஆணையர்கள், சட்ட, தொழில்நுட்ப நிபுணர்களும் பங்கேற்கின்றனர்.

புதுடெல்லி,

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் , அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளும் மாநிலத் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், தேர்தல் முன்னெற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்க உள்ளது. அதற்காக மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மாநில தேர்தல் ஆணையர்களின் முக்கியமான மாநாடு நாளை நடைபெற உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், தேர்தல் தொடர்பான சட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், வரவிருக்கும் தேர்தல்களை வெளிப்படையான மற்றும் குற்றமற்ற முறையில் நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT பயன்பாடு, தேர்தல் செலவின கண்காணிப்பு, சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வசதிகள், பெண்கள் வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் முயற்சிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.