சிம்லா,
இமாசல பிரதேசத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பா.ஜனதா முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று முக கவசம் அணியாமல் சட்டசபை கூட்டத்துக்கு வந்தார். மேலும் சில உறுப்பினர்களும் முக கவசம் இன்றி கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கட்சியை சேர்ந்த ஹர்சவர்தன் சவுகான் எம்.எல்.ஏ. பேசும்போது, இதை சுட்டிக்காட்டியதுடன், கொரோனாவுக்கு எதிராக மாநில அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி, முக கவசம் அணியாத முதல்-மந்திரிக்கு ஏன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
கொரோனா விதிமுறைகளை அரசே தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய சவுகான், இந்த சூழலில் மக்களுக்கு இவ்வளவு அதிக அபராதம் போடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதே கருத்தை எதிர்க்கட்சி தலைவரான முகேஷ் அக்னிகோத்ரியும் சுட்டிக்காட்டினார். பின்னர் பேசிய முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், கொரோனா அதிகரிப்பால்தான் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், தவறும் மக்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை குறைக்க போலீசாரிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.