தேசிய செய்திகள்

பிரியங்கா தாக்குதல் விவகாரம்; உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

பிரியங்கா காந்தி மீது தாக்குதல் நடத்தியதற்காக உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை மற்றும் சமூக ஆர்வலரான சடப் ஜபார் கடந்த 19ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (கிழக்கு) பிரியங்கா காந்தி இன்று காரில் சென்றார். வழியில் போலீசாரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி புறப்பட்டு சென்றார். ஆனால் அவரை வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் அமர்ந்தபடி சென்றார்.

இதுபற்றி பிரியங்கா கூறும்பொழுது, போலீசார் என்னை சூழ்ந்து கொண்டு தடுத்து நிறுத்த முயன்றனர். பெண் போலீசார் ஒருவர் என்னை பிடித்து கொண்டார். மற்றொருவர் என்னை தள்ளி விட்டார் என கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அக்கட்சியின் நிர்வாகி சுஷ்மிதா தேவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, அமைதிக்கு இடையூறு ஏற்படாமல் பொறுப்புள்ள தலைவராக பிரியங்கா காந்தி செயல்பட்டார்.

அவர் 144 தடை உத்தரவை மீறவில்லை. ஆனாலும், போலீசாரால் தாக்கப்பட்டு உள்ளார். உத்தர பிரதேசம் முழுவதும் குண்டர்களின் அரசாட்சி நடந்து வருகிறது. அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.