தேசிய செய்திகள்

ஓட்டுக்காக காங்கிரஸ் எதையும் செய்யும் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஓட்டுக்காக காங்கிரஸ் எதையும் செய்யும் என தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கவுகாத்தி,

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அக்கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் அசாமில் தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அசாமின் லட்சுமிப்பூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

அசாமில் இன்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, இது தற்போது ஊடுருவல்காரர்கள் இல்லாத நிலையில் உள்ளது. பட்ருதீன் ஜமாலின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி அசாமின் அடையாளத்தை அழிக்க முயற்சிப்பவர்களுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. அசாமின் மரபுகள் அழிக்கப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? ஊடுருவல்காரர்களை ஊக்குவிக்கும் குழுவிடம் இருந்து காங்கிரஸ் உதவி பெறுகிறது.

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை ரூ.100 ஆக கூட காங்கிரஸ் உயர்த்தவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) அரசில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே காங்கிரஸ் தற்போது பொய்களை பரப்பி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் தேயிலை தோட்ட ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஓட்டுக்காக காங்கிரஸ் எதையும் செய்யும்... காங்கிரஸ் இங்கு இடதுசாரிகளுடன் கைகோர்த்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கேரளாவில் இடதுசாரிகளை துஷ்பிரயோகம் செய்கிறது. இதுபோன்ற கூட்டணி ஊடுருவல்களையும், ஊழலையும் மட்டுமே உறுதி செய்யும் என்றார்.