தேசிய செய்திகள்

அசாம்: காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

அசாம் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.

கவுகாத்தி,

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்மாநிலத்தின் நடுலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுனில் குமார் செத்ரி களமிறங்கியுள்ளார். அவர் நடுலார் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சுனில் குமார் நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். நிப்லம் புறநகர் சாலையில் சென்றபோது அவரது காரை இடைமறித்த கும்பல் சுனில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த சுனில் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுனில் குமார் மீது பாஜகவினர் நடத்தியதாக அசாம் காங்கிரஸ் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.