லக்னோ,
உத்தரபிரதேச மாநில அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். மாணவர் ஒருவர் காங்கிரஸின் கரங்களில் இஸ்லாமியர்களின் ரத்தக்கறை படிந்துள்ளது. அதனை எப்படி கழுவப்போகிறீர்கள்? என கேள்வியை எழுப்பினார். சற்று பொறுமையாக இருந்த சல்மான் குர்ஷித் பதில் அளித்து பேசுகையில், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட கேள்வியாகும். எங்களுடைய கையிலும் ரத்தக் கறை படிந்து உள்ளது. காங்கிரஸ் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் எனக்கும் பங்கிருக்கிறது. எங்களின் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இருக்கட்டும், உங்களை ஒருவர் தாக்க முன்வந்தால் அவர்களிடம் இருந்து உங்களை நாங்கள் காப்பாற்றக்கூடாது என நீங்கள் ஏன் சொல்ல நினைக்கிறீர்கள், என்று கேள்வியை எழுப்பினார்.
மேலும் சல்மான் குர்ஷித் பேசுகையில், எங்கள் கையில் படிந்து உள்ள ரத்தக்கறை உடனடியாக மக்களிடம் காண்பிக்கத் தயாராக இருக்கிறோம். இருப்பினும் நீங்கள் புரிந்துக்கொண்டு இதுபோன்ற ரத்தக்கறை உங்கள் கரங்களில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மற்றொருவரை தாக்கினால், நீங்களும் ரத்தக்கறை படிந்த கரங்களை கொண்டவர்களில் ஒருவராக மாறிவிடுகிறீர்கள். ஆதலால் வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே இதுபோன்ற சூழலை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். 10 ஆண்டுகளுக்குப் பின் இதே இடத்தில் நீங்கள் வரும் போது, இதே கேள்வியை உங்களிடம் கேட்கப்படாத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
மாணவர் 1948-க்கு பின்னர் காங்கிரஸ்தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. ஹசன்புரா, மலியானா, முசாபர்பூர் என காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ் நடந்த கலவரங்களையும் பட்டியலிடலாம். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதுதான் பாபர் மசூதியில் சிலைகளை வைக்கவும், பாபர் மசூதியை இடிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. எனவே காங்கிரஸ் கட்சியின் கையிலும் இஸ்லாமியர்களின் ரத்தக் கறை படிந்து உள்ளது, இதில் உங்களுடைய கருத்து என்ன? என கேள்வியை எழுப்பி உள்ளார். இதற்கு சல்மான் குர்ஷித் அளித்த பதில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் அவர் மீடியாக்களிடம் பேசுகையில், தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தினார்.
நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன், நான் காங்கிரஸ் கட்சியையே ஆதரிக்கிறேன். நான் கூறியதை தொடர்ந்து கூறுவேன். ஒரு மனித நேயத்துடன் என்னுடைய கருத்தை தெரிவித்தேன், என்றார் சல்மான் குர்ஷித்.