புதுடெல்லி,
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் உப்பு எடுக்க வரி போட்டனர். அதை எதிர்த்து 1930-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரையில் தடையை மீறி உப்பு எடுக்க நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணம் ஏப்ரல் 6-ந் தேதி முடிந்தது.
இது ஆங்கிலேய அரசுக்கு எதிரான வரிகொடா இயக்கமாக, அகிம்சை போராட்டமாக அமைந்தது. இது தண்டி யாத்திரை என்றும் உப்புச்சத்தியாகிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரை தொடங்கிய நாளின் நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தனது வலைப்பக்கத்தில் தண்டி யாத்திரையை நினைவுகூர்ந்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நாம் பார்த்துள்ள பரம ஏழையின் அவலநிலையை நாம் எண்ணிப்பார்த்து சிந்திக்கவும், அந்த நிலையை மாற்றுவதற்காக நாம் உழைக்கவும் காந்திஜி நமக்கு கற்றுத்தந்துள்ளார். ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழித்திடவும், அவர்களுக்கு வளத்தை கொண்டு வந்து சேர்க்கவும் அரசாங்கம் ஆற்றுகிற பணிகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.
1947-ம் ஆண்டில் காந்திஜி கூறி இருக்கிறார். என்னவென்று? இது நம் அனைவரின் கடமை என்று. நாம் என்ன நம்பிக்கையை கொண்டிருந்தாலும், எந்த கட்சியை சார்ந்திருந்தாலும், இந்தியாவின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். தவறான ஆட்சியாலும், ஊழல் பெருக்கத்தாலும் அந்த கண்ணியம் காக்கப்பட மாட்டாது.
தவறான ஆட்சியும், ஊழலும் எப்போதும் இணைந்தே இருக்கும். ஊழல்வாதிகளை தண்டிப்பதற்கு நாங்கள் எல்லா நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம்.
காங்கிரசும், ஊழலும் எப்படி ஒத்துப்போகின்றன என்பதை நமது நாடு கண்டிருக்கிறது.
ராணுவம், தொலைதொடர்பு, நீர்ப்பாசனம், விளையாட்டு விவசாயம், கிராமப்புற வளர்ச்சி இன்னும் எந்த துறையை எடுத்தாலும், அதில் காங்கிரஸ் ஊழல் செய்திருக்கிறது.
தேவைக்கு அதிகமான சொத்துக்களை குவிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். ஆனால் காங்கிரசில் இருப்பவர்கள் அனைவரும் ஏழை எளியவர்களின் தேவைகளை விலையாகக் கொடுத்து, அதில் தங்கள் வங்கிக்கணக்குகளை நிரப்புவதிலும், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதிலும் குறியாய் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும், டுவிட்டரில், நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் பாபுவுக்கும் (காந்திஜிக்கும்), அவரோடு தண்டி யாத்திரையில் பங்கு பெற்றோருக்கும் புகழஞ்சலி செலுத்துகிறேன். தண்டி யாத்திரையைப் பற்றிய சில சிந்தனைகளையும், காந்திஜியின் கொள்கைகளையும், காங்கிரஸ் கலாசாரம் மீதான அவரது அலட்சியத்தையும் எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.