கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பமாக, முதல்-மந்திரி சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில், புதிய முதல்-மந்திரி பதவியேற்கும் வரை இடைக்கால முதல்-மந்திரியாக தொடருமாறு சித்தராமையாவிடம் கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் சட்டசபைக் குழு (CLP) கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கூட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் மேலிடத்தின் பார்வையாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக புதிய முதல்-மந்திரி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையில், டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து காங்கிரஸ் தலைமையகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. கூட்டத்தில் முதல்-மந்திரி பதவிக்கான வேட்பாளராக டி.கே. சிவக்குமாரின் பெயரை சித்தராமையாவே முன்மொழிவார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் போட்டியின்றி காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின், டி.கே. சிவக்குமார் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கர்நாடகாவில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்க உள்ளது.