தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; சச்சின் பைலட்டுக்கு அழைப்பு

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவியும், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உட்கட்சி பூசல் நடந்து வந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. அசோக் கெலாட் தனது அரசுக்கு பெரும்பான்மையை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பரபரப்பு நிறைந்த அரசியல் சூழலில், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை என கூறி வந்த சச்சின் பைலட், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்சியில் சில குழப்பங்கள் நடந்து வந்தபோதிலும், நாடு, மாநிலம், மக்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் நலனுக்காக நாங்கள் அவற்றை மன்னிக்க வேண்டிய மற்றும் மறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

காங்கிரசில் கெலாட்டுக்கு எதிராக உட்கட்சி பூசல் ஏற்பட்டபொழுது, சச்சின் பைலட்டிடம் இருந்து விலகி இருக்கும்படி முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தன்னுடன் தொடர்பில் இருந்த எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டு கொண்டார் என கூறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதேவேளையில், ஜெய்ப்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பா.ஜ.க. சட்டமன்ற குழு கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும் கலந்து கொண்டுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை