ஷில்லாங்,
மேகாலயா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 27ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் வில்லியம் நகர் சட்டசபை தொகுதியில் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோனதன் என்.சங்மா (வயது 43) போட்டியிட்டார். அவர் தன் ஆதரவாளர்களுடன் கிழக்கு கரோ பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு வில்லியம் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பயங்கரவாதிகள் சிலர் அவர் சென்ற வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளையும் வீசினர். இதில் ஜோனதன் என்.சங்மா பரிதாபமாக பலியானார். அவருடன் சென்ற ஆதரவாளர்கள் 3 பேரும் இறந்தனர். இச்சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல்மந்திரி முகுல் சங்மா கடும் கண்டனம் தெரிவித்தார்.