புதுடெல்லி,
அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இவர்கள் அனைவரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரம் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட அசாமின் பூர்வீக குடிமக்கள் ஏராளமானோரும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம், நேற்று பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அசாம் குடிமக்கள் வரைவு பட்டியல் தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க கோரி காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.பி ஆதிர் ராஜன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.