மீரட்டில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சி எவ்வளவு சித்தாந்த ரீதியாக திவாலாகியுள்ளது என்பதைக் காங்கிரசின் இளைஞர் அணி நடத்திய சட்டையில்லா போராட்டம் காட்டுகிறது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உலகளாவிய நிகழ்வை காங்கிரஸ் , தனது இழிவான அரசியலுக்கான தளமாக மாற்றியது என்றும், ஏற்கனவே நீங்கள் நிர்வாணமாக இருக்கிறீர்கள், பிறகு ஏன் உங்கள் ஆடைகளைக் கழற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது? என்றும் கடுமையாக சாடினார்.
பிரதமர் மோடி மேலும் கூறியதாவது: இந்தியாவை அவமதித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் இத்தகைய செயலுக்கு அக்கட்சியின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக உள்ளது நிலைமை. இந்தச் செயலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியினர் அவர்களை விட்டு சற்று விலகி உள்ளனர். காங்கிரஸ் தலைவர்களிடம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் நாட்டை ஆட்சி செய்ய விரும்பினால் முதலில் நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற செயல்களைச் செய்வது எந்தவொரு பலனையும் தராது" என்றார்