ராமநகர்,
காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி இன்று கனகபுராவில் இருந்து பெங்களூரு நோக்கி பாதயாத்திரை நடத்தப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் சார்பில் கட்சியின் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.
இந்த பாதயாத்திரை இன்று தொடங்கி வருகிற 19-ந் தேதி நிறைவு பெற இருக்கிறது.
கனகபுராவில் இருந்து பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானம் வரை 165 கிலோ மீட்டர் தூரம் வரை, இந்த பாதயாத்திரை ஒட்டு மொத்தமாக 11 நாட்கள் நடக்க உள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட கோரி காங்கிரஸ் இன்று நடத்தும் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதுடன், ராமநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதயாத்திரையை தடுக்கும் நோக்கத்திலேயே ராமநகரில் 144 தடை உத்தரவும், வார இறுதி ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கை மீறி பாதயாத்திரை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் இன்று பாதயாத்திரை நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு நடந்து சென்ற சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பாதயாத்திரையில் அவரது பயணம் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பெங்களூருவுக்கு புறப்பட்டார். நம்முடைய தண்ணீர், நம்முடைய உரிமை என்று பெயரிடப்பட்ட இந்த பாதயாத்திரையில் அவர் நாளை இணைந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.