திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், கேரள மாநிலத்தில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ,
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு வருகை தந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த ராகுல் காந்தியை கட்சியினர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து நேரடியாக செங்கனூரில் உள்ள நிவாரண முகாம் சென்ற ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.