தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; போக்குவரத்து பாதிப்பு

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று காங்கிரசார் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாட்டு வண்டியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து எடுத்து வந்தனர். ஸ்கூட்டர் ஒன்றை சவயாத்திரையாக செய்து காங்கிரசார்

தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். மேலும் நடுரோட்டில் வைத்து சமையலும் செய்து எதிர்ப்பை காட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமலிங்கரெட்டி பேசியதாவது:-

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மத்திய அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படுத்தி கொடுக்கும் சட்டங்களை இயற்றுவதில் பரபரப்பாக இருக்கிறது. மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களை கிளறி அதன் மூலம் வாக்கு வங்கியை பலப்படுத்தி கொள்ள பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

விவசாய விளைப்பொருட்கள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் உள்நாட்டில் வரிகளை உயர்த்தி இருப்பதால் பெட்ரோல்-டீசல் விலை சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாத அளவிக்கு மத்திய அரசு அதிகரித்துள்ளது.

இவ்வாறு ராமலிங்கரெட்டி பேசினார்.

காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே பேசும்போது, "பிரதமர் மோடி, அதானி, அம்பானியின் நலனுக்காக பாடுபடுகிறார். இதனால் 130 கோடி மக்களின் வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டார்.

டெல்லியில் விவசாயிகள் கடந்த 75 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். பலர் இறந்துவிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு அலட்சியமாக செயல்படுகிறது. விவசாய விளைப்பொருட்கள் விலையும் குறைந்துவிட்டது" என்றார்.

சகித்துக்கொள்ள முடியாது

மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், "பிரதமர் மோடி ஹிட்லரை விட மோசமாக செயல்படுகிறார். அவரை நீண்ட காலம் நம்மால் சகித்துக்கொள்ள முடியாது. அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க வேண்டும்" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, எச்.எம்.ரேவண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க அங்கு அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசாருக்கும், மகளிர் காங்கிரசாருக்கும் லேசான வாக்குவாதம் நடந்தது. மேலும் போராட்டம் நடந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு