புதுடெல்லி,
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லி பகுதியில் நிலவும் வன்முறை தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், டெல்லியில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சின் கோஹிலை அழைத்து, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி உள்ளார்.
டெல்லியின் நிலைமை குறித்தும், வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.