நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தரர்கள் இல்லாமல்...
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் சாலை பணிகள், மீன்பிடி தொழில், ஜவுளி பூங்கா என பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதுவைக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுவையில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் கிரண்பெடியுடன் சண்டை போடுவதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் எண்ணம் என்னவென்றால் இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களிடம் நேரடியாக பலன் சென்றடைய வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நேரடி பணப்பரிமாற்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.
மக்கள் புறக்கணிப்பார்கள்
ஆனால் இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பல மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளன. புதுவைக்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்று நாராயணசாமி கூறுகிறார். ஆனால் ஜவுளி பூங்கா, சாகர்மாலா திட்டங்கள் புதுவைக்கு கிடைத்துள்ளது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். மாநில வளர்ச்சிக்கான புதிய அரசு அமையும். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். எங்கள் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அர்ஜூன்ராம் மேக்வால் கூறினார்.
பேட்டியின்போது ராஜீவ்சந்திரசேகர் எம்.பி., மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தங்க.விக்ரமன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர்கள் செல்வம், சாய் சரவணன், ரவிச்சந்திரன், மாநில செயலாளர் அகிலன், மாவட்ட தலைவர் நாகேஷ்வரன் உள்பட பலரும் உடனிருந்தனர்.
தள்ளுமுள்ளு
மணவெளி தொகுதி பாரதீய ஜனதா கட்சி சார்பாக டி.என். பாளையம் காலனியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் சென்றார். இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மத்திய மந்திரி தங்கள் பகுதிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காண்பித்தனர்.
மேலும் மத்திய மந்திரியே வெளியேறு, கவர்னர் கிரண்பெடியை வெளியேற்று என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மீண்டும் எதிர்ப்பு
இந்த பரபரப்புக்கு மத்தியில் மத்திய மந்திரி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டுகள் ரங்கநாதன், மோகன்குமார், லோகேஸ்வரன், ஜிந்தா கோதண்டராமன், ரச்சனாசிங் ஆகியோர் தலைமையில் போலீசார் மத்திய மந்திரியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.