மும்பை,
மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றன. ஆனால், முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் தொடர் பிடிவாதம் காரணமாக பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யரி சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் அரசு அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவார். சிறுபான்மை சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் அரசை காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
சிவசேனா மூத்த தலைவர்கள் கவர்னரை சந்திக்க உள்ளனர். இன்று எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் கொடுக்கிறார்கள், பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னரிடம் கூடுதல் கால அவகாசம் கோரவும் சிவசேனா திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
யார் ஆட்சியமைத்தாலும் மராட்டிய மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படப்போவது இல்லை என்பது உறுதி. மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருங்கள். 2020ம் ஆண்டுவாக்கில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. சிவசேனாவை கூட்டணியில் இணைத்து தேர்தலை எதிர்கொள்வோமா? என்று தனது ட்விட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார் சஞ்சய் நிருபம்.