புவனேசுவரம்,
ஒடிசா முதல்-மந்திரியாக பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் (வயது 74) உள்ளார். அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி உள்ளதாக ஒரு மொட்டைக்கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், கூலிப்படையினர் சிலர் உங்களை கொல்வதற்கு சதி செய்துள்ளனர். அவர்கள் தொழில் ரீதியிலான குற்றவாளிகள். ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களையும், பாதி தானியங்கி துப்பாக்கிகளையும் வைத்துள்ளனர். நீங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எச்சரிக்கையாக இருங்கள் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான சதிகாரர், மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்துமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி., உளவுத்துறை டி.ஜி.பி., புவனேசுவரம் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு மாநில அரசு சிறப்பு செயலாளர் (உள்துறை) சந்தோஷ் பாலா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதல்-மந்திரி இல்லம், அலுவலகம் ஆகியவற்றின் பாதுகாப்பையும், அவரது பயண பாதுகாப்பையும் பரிசீலித்து வலுப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.