புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தன்னையும், எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளையும் பேச அனுமதிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அதை மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறியதாவது:-
இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர்களுடனும், கள அதிகாரிகளுடனும் விவாதிக்கவே நடத்தப்பட்டது. இருப்பினும், அந்த அதிகாரிகள் பணியாற்றும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கார், மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலெக்டர்கள் பேசினர். ஆனால், மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட கலெக்டரை மம்தா பானர்ஜி பேச விடவில்லை. பிறகு நாடகம் ஆடுவதற்காக அவர் அப்படிச் செய்தார். அவர் பிரதமர் நடத்திய கூட்டங்களை புறக்கணிப்பதில் சரித்திரம் படைத்தவர் என்று அவர்கள் கூறினர்.