புதுடெல்லி,
தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்க தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தடையை நீக்கி கடந்த மாதம் 20-ந் தேதி உத்தரவிட்டனர். எனினும் தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் கூட்டுறவு சங்க தேர்தலில் தாக்கலான மொத்த வேட்புமனுக்கள், அதில் தள்ளுபடி செய்யப்பட்டவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்டனர்.
அதன்படி இதுவரை நடைபெற்ற 2 கட்ட தேர்தல் தொடர்பான நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தமிழக அரசு வக்கீல் வினோத் கன்னா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 39,277 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 4,525 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 12,924 மனுக்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 42,479 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 2,726 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், 17,412 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம் 48,555 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 5,348 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 19,476 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. மேலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.