புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாது அலை சுனாமி அலை போல பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தினமும் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரை கொரோனா வைரஸ், தனது கோரப்பிடியின் கீழ் கொண்டு வந்தது. நேற்று இந்த பாதிப்பு சற்றே குறைந்தது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சுமார் 14 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தான் இந்த பாதிப்பு பதிவாகி இருக்கிறது.
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை என்பது 1 கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் 77.67 சதவீதத்தினர் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மாநிலத்தில் மட்டுமே புதிதாக 58 ஆயிரத்து 924 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 28 ஆயிரத்து 211 பேரும், டெல்லியில் 23 ஆயிரத்து 686 பேரும் கொரோனாவின் தாக்குதலுக்கு நேற்று ஆளாகி இருக்கிறார்கள்.
நேற்று தொற்று பாதிப்பு சற்றே குறைந்திருந்தாலும்கூட, கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு சற்றே அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் 1,619 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 1,716 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 351 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். டெல்லியில் 240 பேர், சத்தீஷ்காரில் 175 பேர், உத்தரபிரதேசத்தில் 167 பேர், கர்நாடகத்தில் 146 பேர், குஜராத்தில் 117 பேர் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்று அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 9 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து தப்பி உள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தாலும் கூட உயிரிப்பு என்பது 1.18 சதவீத அளவில் தான் இருக்கிறது. இது உலகின் மிகக்குறைந்த உயிரிழப்பு விகிதங்களில் ஒன்று.
நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற கொரோனா சிகிச்சையின் பலனாக நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பினர்.
இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1 கோடியே 31 லட்சத்து 8 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று குணம் அடைந்து வீடு திரும்பியவர்களில் மராட்டிய மாநிலத்தினர் மட்டுமே 52 ஆயிரத்து 412 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் என்பது 85.56 சதவீதமாக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைவதற்காக தொடர் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை நேற்று தொடர்ந்து 41-வது நாளாக அதிகரித்தது. நேற்று புதிதாக 1 லட்சத்து 2 ஆயிரத்து 648 பேர் சிகிச்சையில் சேர்ந்தனர்.
இவர்களையும் சேர்த்து சிகிச்சையில் தொடர்வோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 31 ஆயிரத்து 977 ஆக அதிகரித்து இருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 13.26 சதவீதம் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.