புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. இதன்படி, 3,229 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,21,533 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மாநிலத்தில் 26 பேர் கொரோனாவால் கடந்த இன்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,770 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,88,122 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 28,641 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இன்று லேசான காய்ச்சல் ஏற்பட்டதனை தொடர்ந்து நடந்த கொரோனா பரிசோதனை முடிவில், பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் நடந்த கொரோனா பரிசோதனையில் கலந்து கொண்ட 180 பேரில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்களில் டெல்லி சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் கிரிஷ் சோனி, பிரமிளா தோகாஸ் மற்றும் விஷேஷ் ரவி ஆகியோர் ஆவர். இது தவிர்த்து சட்டசபை பணியாளர்கள் 3 பேர், பத்திரிகையாளர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்களான அவர்கள் பரிசோதனை முடிவை தொடர்ந்து, சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் உடனடியாக வெளியேறினர்.