கொல்கத்தா,
கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் பரவலாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டன. இதனால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கின. தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தின.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் முன் இன்று கூறும்போது, பிற மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தின. ஆனால் நாங்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளையே விதித்தோம்.
பொதுமக்களும் அதற்கு ஆதரவு அளித்தனர். இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள உணவு விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரை உணவு விடுதிகள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.