புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு 7-ந் தேதி பிற்பகல் முதல் இருமலும், காய்ச்சலுக்கான அறிகுறியும் இருந்து வருகிறது. இதனால் டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருக்கு 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று சஞ்சய் சிங் கூறி உள்ளார்.
கெஜ்ரிவால் சர்க்கரை நோயாளி என்றும் டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கொரோனா அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பிறகு கெஜ்ரிவால் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டார்.
கொரோனாவை ஒழிக்கும் போரில் களத்தில் முன்னணியில் நின்று போராடி வரும் கெஜ்ரிவாலுக்கு, பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வரும் என நம்புவதாகவும், அதற்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு என அறிந்ததும் அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், அவர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாகவும் டெல்லி பாரதீய ஜனதா தலைவர் ஆதேஷ் குமார் குப்தா கூறி உள்ளார்.
கெஜ்ரிவால் விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாகவும், பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவரும் என நம்புவதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.