புதுடெல்லி,
நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை தொடங்குகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறார்கள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், கோவின் இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு பிறந்த சிறுவர்கள், தடுப்பூசி போடும் நாளில் 12 வயதை எட்டியிருக்க வேண்டும் என்றும், ஒருவேளை 12 வயதை எட்டியிருக்கவில்லை என்றால் முன்பதிவு செய்திருந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும், முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு 28 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.